கட்டுரை

நதியில் வெள்ளம்; கரையில் நெருப்பு! கொடநாடு: தர்மசங்கட அதிமுக

Staff Writer

திரி பற்றவைக்கப்பட்ட வெடிகுண்டைப் போல் காத்திருக்கிறது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொள்ளை மற்றும் கொலை வழக்கு.

சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த எஸ்டேட் உள்ள மாளிகையில்தான் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓய்வெடுப்பதற்காக தங்குவார். பல முக்கியமான அரசு அதிகாரிகள் கூட்டங்களை சந்திப்புகளை இங்கே நடத்தி உள்ளார் அவர்.

‘அம்மா இருந்தவரைக்கும் இந்த எஸ்டேட் தமிழக அரசியலில் முக்கியமான ஒரு மையமாக இருந்தது. மலைப்பகுதி என்பதால் மத்திய சுற்றுச்சூழல் துறை சிறப்பு அனுமதியுடன் 24 மணி நேர மின்சார தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனடி ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி, 27 சிசிடிவி காமிராக்கள், எப்போதும் கண்காணிக்கும் காவல்துறை என பலமான பாதுகாப்பில் இருந்தது இந்த எஸ்டேட். அவர் மரணத்துக்குப் பின்னும் இந்த பாதுகாப்புகள் தொடர்ந்தன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிகள் மூவரில் ஒருவராவது இரவில் இந்த பங்களா பாதுகாப்பைப் பார்வையிடும் ஏற்பாடும் இருந்தது. அவ்வளவு பலமான இந்த இடத்தில் புகுந்து கொள்ளையிடும் அவசியம் யாருக்கு இருந்திருக்கும்? என்ன எடுத்துச் சென்றிருப்பார்கள்? போன்ற கேள்விகள் அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் இருக்கிறது' என்று சொல்கிறார், அதிமுக ஆதரவாளர் ஒருவர்.

2017 ஏப்ரல் மாதம் நடந்தது இந்த கொள்ளை நிகழ்வு. எஸ்டேட் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருட்டு நடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளைத் தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதன் பின்னர் வரிசையாக மர்மமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதா வின் கார் ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தில் மரணமடைகிறார். மறுநாளே இன்னொரு குற்றவாளியான சயன் என்பவர் குடும்பத்துடன் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி மனைவி மகளை பறிகொடுக்கிறார். சில நாட்கள் கழித்து இந்த எஸ்டேட்டின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருட்டு குற்றம் சாட்டப்பட்ட சயன் மற்றும் வாளையார் மனோஜ் இருவரது பேட்டியை டெல்லியில் தெகல்கா பத்திரிகையாளர் மேத்யூஸ் வெளியிட்டு புயலைக் கிளப்பியது. இந்த இருவரும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதில் பதட்டம் தெரிந்தது. சயன் குண்டர் சட்டத்தில் பின்னர் சிறை சென்றார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, ‘கொடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று நூறு நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான, ஜாமீனில் வெளிவந்திருக்கும் சயனிடம் மீண்டும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. இது அதிமுகவினரால் கடுமையான எதிர்ப்புக்குள்ளானது. தன்னை வேண்டுமென்றே சிக்க வைக்க கொள்ளைக் குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் சயன் என்பவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ குழுவினருடன் ஆளுநரைச் சந்தித்து அவர் புகார் கூறினார்.

ஆனால் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் வழக்கை நீலகிரி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

என்னமாதிரியான ஆவணங்கள் கொடநாடு பங்களாவிலிருந்து திருடு போயிருக்கும்? அதனால் யாருக்குப் பலன் கிடைத்திருக்கும் என்பது பற்றி பல யூகங்கள் மக்களிடத்தில் உள்ளன.

 ‘அங்கு என்ன ஆவணங்கள் இருந்திருக்கும் என்பது பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் மரணமடைந்துவிட்டார். இன்னொருவருக்கு எல்லா கதையும் தெரியும். அவர் வாய் திறப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை' என்று சொல்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் என்றால் சமூகம் ஓரளவுக்கு மேம்போக்காக எடுத்துக்கொள்ளும். ஆனால் கிரிமினல் குற்றச்சாட்டு அதுவும் தங்கள் கட்சித் தலைவியின் மாளிகைக்குள்ளேயே திருட்டு, தொடர்கொலைகள், அவற்றை பற்றிய விசாரணையில் ஈடுபாடு காட்டாமை ஆகியவற்றை அக்கட்சித் தொண்டர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

சட்டமன்றத்தில் மத்திய அரசின் வேளாண்சட்டங்களுக்கு எதிரான மசோதா விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம், ‘‘நதியில் வெள்ளம் கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் தற்போதைய நிலைமை' என, சிவாஜியின் தேனும் பாலும் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி தன்னுடைய நிலைமை என்னவென்று அவை முன்னவருக்கு தெரியும் என கூறினார்.

இது வேளாண் சட்டங்களுக்காகக் கூறப்பட்டதா? கொடநாடு விவகாரங்களைக் குறித்துக் கூறப்பட்டதா என்ற கேள்விக்கு பல ஊகங்கள் பதில்களாக அரசியல் வட்டாரங்களில் உலவுகின்றன.

செப்டம்பர், 2021